Thursday, January 13, 2011

ஆலய நுழைய தயாராகும் உத்தப்புரம் தலித் மக்கள்!

உத்தப்புரம் முத்தாலம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

உத்தப்புரத்தில் இருந்த தீண்டாமைச்சுவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியவற்றின் தொடர் போராட்டங்களின் காரணமாக தமிழக அரசு அதில் ஒரு பகுதியை இடித்து பொதுப்பாதையை ஏற்படுத்தியது. திறந்து விட்ட பொதுப்பாதையில் தலித் மக்கள் சென்றுவருவதில் இன்றைக்கும் பிரச்சனை உள்ளது. தவிர பேருந்து நிழற்குடை அமைப்பது, தலித் மக்களை முத்தாலம்மன் கோவிலுக்குள் அனுமதிப்பது போன்ற பிரச்சனைகளுக்கு தமிழக அரசு இன்னும் தீர்வுகாணவில்லை.

இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஜனவரி 31ம் தேதி உத்தப்புரம் முத்தாலம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட் டத்தை நடத்த உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. உத்தப்புரத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நடைபெற்ற ஊர்க்கூட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தலித்மக்கள் கலந்துகொண் டனர். அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கே. பொன்னுத்தாய், மாநிலக்குழு உறுப்பினர் சங்கரலிங்கம், மாவட்ட அமைப்பாளர் எம். தங்கராஜ், பொன் னையா, நாட்டாண்மைகள் முத்துராஜ், பெரியசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தேவராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துராணி ஆகியோர் போராட்டத்தின் நோக்கம் குறித்துப் பேசினர்.

ஆலய நுழைவுப்போராட்டத்தை விளக்கி ஜனவரி 21ம் தேதி மதுரையிலும், 26ம் தேதி சென்னையிலும் சிறப்புக் கருத்தரங்கங்கள் நடைபெறுகிறது. 


No comments:

Post a Comment