Sunday, January 9, 2011

"சார்... எனக்கு வேலை கிடைச்சுருச்சு...!"

"சார்... எனக்கு கோ-ஆபரேடிவ் பேங்குல வேல கிடைச்சுருச்சு..." செல்போனில் மகிழ்ச்சிக்கடலில் நீந்திக்கொண்டிருப்பது போன்ற குரல்.

பதில் சொல்வதற்கு முன்பே அந்தக்குரல் தொடர்கிறது. "சார்... நம்ம மையத்துல மேத்ஸ்(கணக்கு) எடுத்ததுதான் சார் ரொம்ப உதவியா இருந்துச்சு..." என்றார் கல்பனா என்ற அந்தப்பெண். கோவையில் அண்மையில் நிரப்பப்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியர் பணியிடங்களில் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்துள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தால் அட்டவணை சாதியினருக்காக கோவையில் நடத்தப்பட்டு வரும் டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தைதான் அவர் குறிப்பிடுகிறார்.

இவர் மட்டுமல்ல. இங்கு நடத்தப்படும் வகுப்புகளால் காவலர் பணிக்கான எழுத்துத்தேர்விலும் மூவர் தேர்வு பெற்றனர். 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதியன்று இந்த மையத்தின் துவக்க விழா நடைபெற்றது. ஜனவரி மாதத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சியைத் துவக்கினோம். ஏப்ரல் இறுதியில் அதற்கான தேர்வு நடைபெற்றது. இந்த வகுப்பு நடந்து கொண்டிருந்தபோதே, இப்போதுதான் எங்களுக்கு இதுபோன்ற வழிகாட்டுதல்கள் கிடைக்கின்றன. ஏதாவது ஒரு வகையில் வகுப்புகள் தொடரட்டும் என்றார்கள் வகுப்புகளுக்கு வந்தவர்கள். இதனால் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பைத் துவங்கினோம்.

தொழில் ரீதியாக இந்த வேலையைச் செய்யும் ஒருவரை அணுகலாம் என்று முடிவெடுத்தோம். திரு.சபாபதி என்பவர் ஆங்கிலத்தில் பேசுவதற்கான வகுப்புகளை நன்றாகச் செய்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்பு கொண்டோம். விஷயத்தை விளக்கிவிட்டு உங்களுக்கு எவ்வளவு கட்டணம் தர வேண்டும் என்று கேட்டோம். இவ்வளவு பெரிய பணியை உங்கள் மையம் செய்து வருகிறது. நானும் அதில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறேன். எனக்கு கட்டணம் எதுவும் வேண்டாம் என்றபோது மையம் பரந்து விரிவடைவது போன்ற உணர்வு ஏற்பட்டது. அவரது வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன.

அது நிறைவுபெறும் நேரத்தில் டி.என்.பி.எஸ்.சி. சார்பாக கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ) தேர்வுக்கான விளம்பரம் வந்தது. அதற்கான வகுப்புகள் துவங்கப்பட்டன. தற்போது அதில் இரண்டாம் கட்டத்திற்கான தயாரிப்பில் இறங்கியிருக்கிறது கோவை டாக்டர்.அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையம். ஜனவரி 2 ஆம் தேதி முதல் வி.ஏ.ஓ தேர்வுக்காகவும், வரும் காலத்தில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதப் போகிறவர்களுக்காகவும் பயிற்சி வகுப்புகளை நடக்கப்போகிறது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முயற்சியால் மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களிலும் பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன.
பயிற்சி வகுப்புகள் துவங்குகையில் கணிதப் பாடத்திற்கென்று சிறப்பான கவனம் செலுத்துவதென்று முடிவெடுத்தோம். டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு பெரிய அளவில் பயன்படாவிட்டாலும் அதைத்தாண்டி மற்ற தேர்வுகளுக்கு கணிதம் அத்தியாவசியம் என்பது நமது ஆசிரியர்களின் கணிப்பாக இருந்தது. அது சரியானது என்பதைத்தான் மையத்தைச் சேர்ந்த கல்பனா கூட்டுறவு வங்கித்தேர்வில் தேர்வு பெற்றது காட்டுகிறது.

அட்டவணை சாதியினர் தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் வெகு தூரம் செல்ல வேண்டியிருப்பது போலவே மையத்தின் பணிகளும் வெகு தூரம் செலல வேண்டியிருக்கிறது. அண்மையில் வெளியான காவலர் தேர்வு முடிவுகளில் கட்-ஆப் மதிப்பெண்களில் அட்டவணை சாதியினருக்கான கட்-ஆப் என்பது மற்ற பிரிவினரை விடக் குறைவாக இருந்தது. அட்டவணை சாதியினரிலும், அருந்ததியருக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் மேலும் குறைவாகவே இருந்தது. இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு ஆகியவற்றை இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் நியாயப்படுத்துகின்றன.

தமிழக அரசுப்பணிகளில் நியாயமான அளவில் இடங்களைப் பெறுவதில் காட்டும் முனைப்பை மத்திய அரசுப்பணிகளும் காட்டிட அட்டவணை சாதியினர் முன்வர வேண்டிய அவசியமுள்ளது. குறிப்பாக, வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்கும் சரியான வழிகாட்டுதலைப் பெற்று தயார் செய்து கொள்ள வேண்டிய அவசியமிருக்கிறது. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். பதவிகளுக்கு போட்டியிடும் தகுதியை கிராமப்புற அட்டவணை சாதியினரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய தயாரிப்புகளுக்கு டாக்டர்.அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் உதவிடும் வகையில் தயாராக வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மையத்தின் பொறுப்பாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இதையுணர்ந்தே, போட்டித் தேர்வுகளுக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல் ஆலோசனைகளில் துவங்கி, திறன் பெற்ற ஆசிரியர்களால் பயிற்சி, தொடர் மாதிரி தேர்வுகள், தேர்வு எழுதப்போகிறவர்களே வகுப்புகள் எடுப்பது, அவர்களே கேள்விகளைத் தயாரிப்பது என்று திட்டமிட்ட முறையில் மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறைதான் வகுப்பு என்பதால், மற்ற நாட்களில் அவர்களைப் படிக்கச் செய்ய வகையில் குறுஞ்செய்தி(எஸ்.எம்.எஸ்) மூலம் ஒவ்வொரு நாளும் மூன்று கேள்விகள் வரை அவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போதைய பயிற்சி பிப்ரவரி 20 வரையிலும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குப்பிறகு திட்டமிட்டுள்ளபடி வங்கி, எல்.ஐ.சி. போன்ற தேர்வுகளுக்கான பயிற்சிகள் நடத்தப்படும். கோவைப் பயிற்சி மையத்தின் உயிர்நாடியாக கோவைக் கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் இயங்குகிறது. வகுப்புக்கு வருபவர்களின் நேரத்தை மிச்சம் பிடிக்க, சங்கத்தின் செலவில் வகுப்பறைக்கே தேநீர் வருகிறது. கேள்வித்தாள்கள், தேர்வுக்கான பாடக்குறிப்புகள் போன்றவற்றை நகல் எடுப்பதற்காக சங்கத்தின் செலவில் ஒரு ஜெராக்ஸ் மிஷினையே இறக்கிவிட்டார்கள். ஓராண்டு காலம் தொடர்ந்து வகுப்புகள் நடந்திருக்கின்றன என்றால் அதற்கு அகில இந்திய இன்சூரன்ஸ ஊழியர் சங்கத்தின் இத்தகைய அர்ப்பணிப்பு செயல்பாடுகள்தான் காரணம் என்றால் மிகையில்லை.

தோழியர் கல்பனாவின் வெற்றி ஆசிரியர்களையும், வேலைக்காகக் காத்திருப்பவர்களையும் உற்சாகப்படுத்தியுள்ளது. வேலையில் சேர்ந்து விட்டாலும், அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதற்காக வகுப்புகளுக்கு தொடர்ந்து வருவேன் என்று அவர் சொன்னது இந்த மையத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக இருந்தது.

No comments:

Post a Comment